29-10-2024 குருமகான் அவர்களின் தீபஒளித் திருநாள் நல்லருளாசிகள்
அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற பரிபூரண பரஞ்சோதியின் நற்கருணையால் உலக உயிர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று என்றும் சந்தோசத்துடன் வாழ தீபஒளித் திருநாள் நல் அருளாசிகள் சந்தோஷம்!
தீபஒளித் திருநாள் என்பது இந்தியா முழுவது மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மற்றும் அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையாகும். சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவராலும் ஒரு எதிர்பார்ப்புடன் கொண்டாடும் பண்டிகையாக தீபஒளித் திருநாள் விளங்குகிறது. அன்பு, மகிழ்ச்சி, உறவுகளை புதுப்பித்தல், உறவுகளை மேம்படுத்துதல், உறவுகளை வளர்த்தல் போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு காரணியாக தீபஒளித் திருநாள் விளங்குகிறது என்றால் மிகை இல்லை!
தீபஒளித் திருநாள் கொண்டாடுவதற்கு பல நிகழ்வுகள் கூறப்பட்டாலும், நரகாசுரன் தனது தீய எண்ணங்கள் தீய செயல்களால் மூஉலகிலும் உள்ள தேவர்கள், மனிதர்கள் எல்லோரையும் துன்பப்படுத்தியதால், கொல்லப்பட்டான்! தீமை அகன்று நன்மை பிறந்த நாள், தீபஒளித் திருநாளாக கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வின் உண்மையை கவனித்தோம் என்றால், நம்மிடையே பல நரகாசுரன்கள் உண்டு: சுயநலம், பொறாமை, வெறுப்பு, கர்வம், அடுத்தவர்களைத் துன்புறுத்தல் போன்ற நம்மிடம் இருக்கும் தேவையில்லாதவையே நரகாசுன்ங்கள்! மனிதர்களின் குணங்கள் தான் அவர்களை தேவர்களாகவும் அசுரர்களாகவும் உருவாக்குகின்றது.
நம்மிலும், நம்மை சுற்றிலும், சமுதாயத்திலும் நடைபெறும் தேவையில்லாத நிகழ்வுகள் அனைத்தும் நரகாசுரன்களின் வெளிப்பாடே! ஒவ்வொருவரிடம் உள்ள தேவையில்லாதவைகளை நீக்கிக் கொள்ளும் அல்லது அதிலிருந்து விலகும் நன்னாளே தீபஒளித் திருநாளாக விளங்குகிறது. தீபங்களை ஏற்றி வைப்பதால் எப்படி இருள் அகன்று ஒளி வெள்ளத்தில் இல்லம் புறத்தில் பிரகாசிக்கின்றதோ, அப்படி உள்ளத்தில் உள்ள தேவையில்லாதவைகள் நீங்கி உள்ளம் பெறும் புத்தொளியின் வெளிப்பாடாக தீபஒளித் திருநாள் விளங்குகிறது!
உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு புத்தாடை அணிதல், இனிப்புகளை வழங்குதல், போன்ற நிகழ்வுகள் ஆகும். மனதில் உள்ள தேவையில்லாதவைகள் நீங்கியதன் வெளிப்பாடு பட்டாசு வெடித்தல் ஆகும். பட்டாசை போல் வெடித்து, காண்போருக்கு மகிழ்ச்சியை கொடுப்பது போல், தூய எண்ணத்துடன் தூய உள்ளத்துடன் செயல்பட்டு நல்லவைகள் உங்களிடம் இருந்து வெளிப்பட பரிபூரண நல்லாசிகள்!
“இன்றைய சூழ்நிலையில் தினம்தோறும் தீபாவளி என்பதைப்போல், பட்டாசுகள் வான வேடிக்கைகள் வெடிப்பதை போல் , பல நாடுகள் மற்ற நாடுகளின் மீது ஏவுகணைகள், குண்டுகளை வீசி வருகின்றன! இது மகிழ்வை தரும் வானவேடிக்கை, அல்ல வேதனையை தரும் வானவேடிக்கை!”
தன்னை உணராது, தன்னுள் அமைதியை உணராதவர்களால், தேவையற்ற எண்ணங்கள், கொள்கைகளைக் கொண்டவர்களால் நடத்தப்படும் சுயநல வான வேடிக்கைகள் இவை! இந்த சூழல் நீங்கி, அவர்களின் மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்கள் நீங்கி, எல்லா மக்களின் எல்லா உயிர்களின்பால் அன்பு கொண்டு, நல்ல செயல்களை முன்னெடுத்து வருகின்ற தீபஒளித் திருநாள், சிறப்பான தீபஒளித் திருநாளாக திகழப் பரிபூரண நல்லாசிகள்!
உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒரே ஒரு நிமிடம் அமைதி காத்து, தங்களுள் அந்த அமைதியை உணர்ந்து செயல்படும் நன்னாளே உண்மையான தீபஒளித் திருநாளாகும்! இன்று உலகம் எதிர்பார்க்கின்ற அமைதியை எல்லோருக்கும் அளிக்கும் இனிய நன்னாளாக தீபஒளித் திருநாள் திகழ்ந்து உலகம் எங்கும் உணர்ந்த நிலையில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க பரிபூரண நல்லாசைகள்!
சந்தோசம்! சந்தோசம்! சந்தோசம்!